மலைப்பாதையில் மண் சரிவு
 
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பித்த வடகிழக்குப் பருவமழையானது தமிழகம் முழுவதும் பரவலாகப் பொழிந்து பல இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ளா 32 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு அரசு தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத வகையில் இப்பருவத்தில் சுமார் 50 செண்டிமீட்டர் அளவு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கனமழை காரணமாக திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஈரோடு செல்லும் வாகனங்கள் சில நாட்கள் கொக்கராயன்பேட்டை மற்றும் குமாரபாளையம் வழையாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பள்ளிபாளையத்திலும் பேருந்து நிறுத்தத்தில் வெள்ளப்பெருக்கின் காரணமாக வாகனப்போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டது. திருச்செங்கோடு அம்மன்குளம் ஏரி, சின்ன தெப்பக்குளம், பெரியதெப்பக்குளம், மலையடிக்குட்டை ஆகிய நீர்நிலைகளும் நிரம்பிவிட்டன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திருச்செங்கோட்டிற்கு நல்ல மழைபொழிவு கிட்டியுள்ளது.

திருச்செங்கோடு திருமலையில் மலைப்பாதை மற்றும் படிக்கட்டுகளில் மண் சரிவு ஏற்பட்டு வாகனங்கள் செல்லும் மலைச்சாலை இரு இடங்களில் பெருத்த சேதம் அடைந்தது . தொடர்ந்து சுமார் 45 நாடகள் (01/Nov/15 to 13/Dec/15) மலைக்கு எந்த வாகனமும் செல்ல முடியாததால் பக்தர்கள் மலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனப் போக்குவரத்து 14/Dec/15 முதல் மீண்டும் துவக்கப்பட்டது. டிசம்பர் 14 முதல் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் டிசம்பர் 21 முதல் திருக்கோயில் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

1988 ல் மலைப்பாதை துவங்கப்பட்டதிலிருந்து இவ்வளவு நாட்கள் தொடர்ச்சியாக வாகனப் போக்குவரத்து இப்போதுதான் முதன்முறையாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மலைப்பாதை சீரமைக்கும் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. வாகனப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் நவம்பர் 18 ல் திருமலையில் நடைபெற இருந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட திருமணங்கள் கீழே உள்ள பிற ஆலயங்களில் நடத்தப்பெற்றன.