சிற்ப்பகலைகள்
 

இங்குள்ள கற்சிலைகளும், சிற்ப்பங்களும், பெரும்பாலும் சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது.
இக்கோயிலில் அமைந்துள்ள மண்டபங்களிலும், தூண்களிலும் வடிக்கப்பட்டுள்ள அழகிய சிற்ப்ப வேலைபாடுகளும் மற்றும் கோயிலை சுற்றி அமைந்துள்ள அற்ப்புதமான கற்சிலைகளும் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மேலும் இக்கோயில் சிறந்த சிற்ப்பகலைக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது.
செங்கோட்டுவேலவர் சன்னதியின் முன் உள்ள கல்தூண்களில் சிவன் வேட்டுவனாகவும், பார்வதி வேட்டுவச்சியாகவும் காட்சியளிக்கின்றனர்.
அதே போல் விமானத்தில் (மேற்கூறையில்) எட்டு கிளிகள் எட்டு திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லினால் கண்கொள்ளா காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும் வகையில் மிகவும் அழகிய கலைநுட்பத்துடனும் மிகுந்த அறிவுதிறனுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
குறவர் நடனகலையும், சிலந்தியை தேள் கவ்வுவது போல் அமைந்துள்ள சிலை வடிவத்தையும் கலைக்கண்ணோட்டத்தோடு நோக்கின் அதன் பெருமையை அறியலாம்.
வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும்.
அர்த்தநாரீஸ்வரர் நேரெதிர் உள்ள நிறுத்த மண்டபத்தில் உள்ள தூண்களில் காளி, ரதிமன்மதன், போன்ற சிற்ப்பங்கள் மிகவும் கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ளன. இம்மண்டபத்தை சபா மண்டபம் என்று கூறுவர். சிலப்பதிகார உரையாசிரியார் அடியாருக்கு நல்லாரை சிறப்பித்த இடம் இவ்விடம் என்று கூறுவர்.
இப்பகுதியில் ஆமைமண்டபம் என்று அழைக்கப்படும் சிறியமண்டம் ஒன்று உள்ளது. இதன் மேல்பகுதி மரத்தாலானது. வைகாசி விசாக திருவிழாவின் போது இறைவனை இம்மண்டபத்தில் எழுந்தருள செய்து வழிபாடு நடைபெறும். அப்போது இதன் மேல்பகுதியில் மலர்களை கொட்டி இயந்திரத்தின் மூலம் இயக்கினால் இதில் உள்ள துவாரத்தின் வழியாக ஒவ்வொரு பூவாக இறைவனின் மீது விழும் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பானதாக கருதப்படும்.
ஆமை மண்டபத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட பல வடிவங்களை உடைய கற்சஙகலி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
வேலவன் முருகன் சன்னதிக்கு போகுமுன் வலதுபுறம் அருணகிரிநாதர் காட்சி தருகிறார்.
நரிகணபதி சன்னதியை ஒட்டி தென்புறத்தில் தாண்டவபத்திரை விலாச மண்டபம் அமைந்துள்ளது. ஊர்துவ தாண்டவ மூர்த்தியும் ஆலங்காட்டு காளியும் எதிரெதிரே இருந்து நடனமாடும் திருவுருங்கள் இங்கு கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.