திருப்பணிகள்
 
இத்திருக்கோவிலுக்கு உண்டியல், மலைப்பாதை குத்தை தொகை, கோயில் பேருந்து மூலம் கிடைக்கும் வருமானம், அர்ச்சணை சீட்டுகள் மூலமாக கிடைக்கும் தொகை, கட்டிடஙகள், காலி மனைகள், வாடகை மற்றும் உரிமை குத்தகைகள் மூலம் கிடைக்கும் வருமானங்கள் மூலமாக கோயில் நிர்வாகம் மிகவும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
கிபி 1509 முதல் 1565 வரை விஜயநகர பேரரசு கிருஷ்ண தேவராயர் ஆட்சிகாலத்தில் அவர் சார்பாக இங்கு ஆட்சி செய்து வந்தவர்களின் தலைமையின் பல திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.
கிபி 1550-ல் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த நரசிங்க ராமாஞ்சி என்பவரால் திருமலையில் வடகோபுரமாகிய ராஜகோபுரத்தை செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து மூலம் செயயப்பட்டது. கயிலாயநாதர் கோயில் முன் நிறுவப்பட்டுள்ள 60 அடி கம்பமும் இவர் காலத்தில் தான் நிறுவப்பட்டது.
கிபி 1608-ல் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த மாரிராஜந்திர மகிபன் என்பவரால் ஆதிகேச பெருமாள் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இது நடைபெற்று சுமார் 400 ஆண்டுகளாகிறது.
இவரின் காலத்தில் தான் கிபி 1617-ல் கையிலாயநாதர் ஆலயத்தின் முன் கோபுரம் பூர்த்தி செய்யப்பட்டது. இன்றைக்கு சுமார் 390 ஆண்டுகளாகிறது.
கையிலாயநாதர் ஆலயத்தின் கோபுரவேலை முடிந்து சுமார் 62 ஆண்டுகளுக்கு பிறகு கிபி 1679-ல் சங்ககிரி ஆட்சி பீடத்தில் இருந்த தேவராசேந்திர ரகுபதி என்பவரால் கையிலாயநாதர் ஆலயத்தின் வாயிற் நிலைக்கதவு செய்யப்பட்டது.
கிபி 1599ல் மோரூர் கண்ணங்குலம் வேலபூபதி சந்ததி வெற்றி குமாரசாமி என்பவரால் அர்த்தநாரீஸ்வரரின் கிழக்கே உள்ள நந்தி, பலிபீடம் முதலியன நிறுவப்பட்டது.
கிபி 1588-ல் மதுரையை ஆண்ட விசுவநாத சொக்கலிங்க நாயக்கர் ஆட்சியில் திருக்கோயிலுக்கு நில தானம் செயயபபட்டதாக சுப்பரமணி சுவாமி கோவிலுக்கு வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிபி 1522-ல் கிருஷ்ணதேவராயர் காலத்தில் சோழமண்டலத்தை சேர்ந்த திரியம்பக உடையார் அர்த்தநாரீஸ்வருக்கு திருவிழா நடத்துவதற்கு நகரின் பல வரிகளை தானமாக கொடுத்ததாக அரியப்படுகிறது.
1619-ல் இம்முடி நல்லதம்பி காங்கேயன் செங்கோட்டுவேலவர் மண்டபத்தையும், அர்த்தநாரீஸ்வரர் மண்டபத்தையும் கட்டினார்.
கிபி 1624-ல் குமாரசாமி கங்கேயன் கந்தபுராண கதையை சிலை வடிவில் வேலவர் சன்னதி முன்விமானத்தில் செய்து வைத்தார்.
மைசூர் மன்னன் சிக்கதேவன் வைகாசி வீதி எனப்படும் கிழக்கு ரத வீதியில் அர்த்தநாரீஸ்வரர் ரதத்திற்கு அருகில் ஒரு நன்னீர் கிணற்றை வெட்டி வைத்தார்.
கிபி 1608-ல் சார்வரி ஆண்டு மாரிராஜேந்திர மதிபன் என்ற அரசன் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தை புதுபித்தார்.
மொளசி வேளப்பக்கவுண்டர் ஊமை நீக்கப்பட்டு பேசும் திறமை பெற்று மலைமீது அர்த்தநாரீஸ்வரர் சந்நதி நிறுத்த மண்டபத்தில் ஆமை மண்டபத்தை கட்டி வைத்தார்.
மரத்தினால் ஆன இதன் விமானத்தை (மேற்பகுதியை) பச்சையண்ணன் என்ற சிற்பி செய்ததாக தெரியவருகிறது.
திருச்செங்கோட்டின் மையப்பகுதியில் இருக்கும் அம்மன் குளத்தை (தற்போது இதன் ஒரு பகுதி பேருந்து நிலையமாக உள்ளது) அந்தியூரில் இருக்கும் பாகம்பிரிய செட்டியார் குமாரர் குமாரவேல் செட்டியார் வெட்டியதாக கல்வெட்டு செய்திகள் கூறுகிறது.
1974 ஈரோட்டை சேர்ந்த வி.வி.சி.ஆர். முருகேசமுதலியார் அவர்கள் மலைகோவிலுக்கு மின்சாரக்கம்பிகளும் மின்விளக்குகளும் அமைத்து கொடுத்தார்.
1980-ல் சொக்கப்பமுதலியார் அவர்களால் அர்த்தநாரீஸ்வரர் திருமணமண்டபத்தின் அருகில் ஒரு சுரங்கம் கட்டிகொடுக்கப்பட்டது.
1989-ல் ரூ.15 லட்சம் செலவில் திருக்குடநன்னீராட்டுவிழா குழுவினர்களின் சார்பில் திருமலை மற்றும் கீழ் கோயில்களில் கோபுரங்கள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருமலைக்கோயிலின் கிழக்கு திசையில் 1989-ல் வட்டூர் மோளிபள்ளி செங்கன்னி குலக்கவுண்டர்கள் குகை மண்டபம் நிறுவப்பட்டது.
1990-ல் திரு.ஓ.வி.காளியண்ணன் திருமதி.கே.பாக்கியம் அவர்களால் திருமலையில் பேருந்து நிற்கும் இடத்தில் தெற்கு புறமுள்ள போர்வெல் மற்றும் கம்பரசர் மோட்டார் நிறுவப்பட்டது.
1993-ல் திரு.ஓ.வி.ரங்கசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவியின் சார்பாக நிழல் கூடம் மற்றும் மலையின் நுழைவு வாயிலில் தெற்குபுறமாக உள்ள மூன்று கடைகளும் ஒரு வீடும் கட்டிகொடுக்கப்பட்டது.
1994-ல் பயணியர் நிழற்கூடம் சன்றோர்குல நாடார் சங்கத்தின் சார்பாக நிறுவப்பட்டது.
1994-ல் திரு.என்.கே.செங்கோடகவுண்டர் திருமதி மாரியம்மாள் அவர்களால் திருமலை கோயில் சுவரின் மேற்குபுற நுழைவுவாயிலில் வடக்கு புற உள்ள நிழற்கூடம் அமைக்கப்பட்டது.
1994-ல் மாசிமகம் விழாகுழுவினரால் திருமண மண்டபம் திருமலையில் கட்டிக்கொடுக்கப்பட்டது.
1994-ல் பூக்கடை நண்பர்கள் குழுவால் மலைக்கோயில் சுவரில் மேற்கு புறம் நுழைவு வாயில் முன்னால் உள்ள திருமண மண்டபம் கட்டிகொடுக்கப்பட்டது.
செங்கோட்டுவேலவர் சன்னதியில் அருகில் சண்டிகேஸ்வரருக்கு ஒரு சிறிய கோபுரத்தை புள்ளிகாரர் குடும்பத்தைச்சேர்ந்த அங்கப்பன் சி.எம்.ஏ.பச்சியண்ணன், காளியண்ணன் சார்பாக அமைத்து கொடுக்கப்பட்டது.
செங்கோட்டுவேலவர் சன்னதியில் முன்புறமுள்ள பலிபீடம், மயில் மண்டபம், கொடிமரம் ஆகியவற்றை வீரவேல் கோத்திரத்தார் சி.எம்.ஏ.பச்சியண்ணன் அவர்கள் அமைத்து கொடுக்கப்பட்டது.
கோயிலின் கிழக்கு உட்புறம் மதில்சுவர் அருகில் கே.ஆர்.செங்கோட்டுவேலு கவுண்டர் நந்தனம் அமைத்து கொடுத்தார்.
கோயிலின் கிழக்குபுறம் தெற்கு பகுதியில் அர்த்தநாரீஸ்வரர் மடபள்ளி மண்டபத்தில் அருகில் அர்ச்சகர்களுக்காக டி.வி.நடேசன் செட்டியார் மண்டபத்தை நிறுவினார்.
அர்ச்சகர்கள் மண்டபத்திற்கு கீழ்புறம் அருகில் சோமனூர் சுப்பு என்பவரால் நிழற்மண்டபம் அமைக்கபட்டது.
1994 ல் கோவிலுக்கு கிழக்குபுறம் அமைந்துள்ள நாக தீர்த்தம் அருகில் சத்திரத் தீர்த்தத்தை பி.டபள்.யூ.டி(PWD)சார்பில் அமைத்துக்கொடுக்கப்பட்டது.
அண்ணா போக்குவரத்து கழகங்களின் சார்பில் தேவஸ்தானத்திற்கு பேருந்துகள் வழங்கப்பட்டது.
திரு ஓ. பழனியப்பமுதலியார் அவர்களின் சார்பாக மலையடிவாரம் என்று அழைக்கப்படு்ம்(ஆறுமுகசுவாமி கோவில்) பகுதியில் ஓர் அழகிய வளைவு அமைக்கப்பட்டது.
1984 ல் மலைப்பாதை போடுவதற்க்கான கால்கோல் விழாவும் நடைபெற்றது.
16.9.88 முதல் கோயில் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கிபி 1512-ல் அர்த்தநாரீஸ்வரருக்கும், செங்கோட்டுவேலவருக்கும் கொடியேற்றுவிழா தெப்பஉற்சவம் கிருஷ்ணதேவராயரால் ஏற்படுத்தப்பட்டது.
கிபி 885-ல் இளங்கோவடிகள் மனைவி மூடி அமுதனார் என்பவரால் செம்பொன் கொடுக்கப்பட்டது. இதனை கொண்டு வருகின்ற வட்டியில் அம்மையப்பனுக்கு ஒரு நந்தாவிளக்கு எரிப்பதாக மக்களால் ஒத்துக்கொள்ளப்பட்டதாக கல்வெட்டுகள் மூலமாக அறியப்படுகிறது.
திரியம்பக உடையார் ஆட்சிகாலத்தில் ஏறிய மூன்றாம் ஆண்டு கிபி 1512-ல் இராயரின் கட்டளை படி நாககிரி மலை மேல் சுவாமிகள் அமைந்த பகுதியை சுற்றி கருங்கற்களால் மதில் சுவர்களை எழுப்பினார். அதேபோல் திருச்செங்கோட்டில் நகரின் மையத்தில் உள்ள தெப்பகுளம் இவரால் கட்டப்பட்டது
கிபி 1599 ஆம் ஆண்டு மோரூர் அத்தப்ப நல்லதம்பி காங்கேயன் மலைமீது ஏறும் படிகளை கட்டினார் இவர் காலத்தில் தான் திருச்செங்கோட்டின் முக்கிய வீதிகளான நான்கு ரத வீதிகள் உருவாக்கப்பட்டன.
அத்தப்ப நல்லதம்பி கங்கேயன் குமாரனுமான திருமலை அத்தப்ப நல்லதம்பி கங்கேயன் அர்த்தநாரீஸ்வரரின் நிறுத்த மண்டபத்தில் தனது மூன்று மனைவிகளுக்கும் தூண்களில் சிலை வடித்தார்.
1599-ல் அத்தப்ப நல்லதம்பி கங்கேயனால் அர்த்தநாரீஸ்வரரின் சந்நதி நிறுத்த மண்டபத்தில் 8 சித்ர தூண்கள் மற்றும் மண்டப தளகற்களும் தேவையான பாவு கற்கள் மற்றும் செங்கோட்டுவேலவர் சன்னதி மண்டபம் கட்டபட்டதாக அர்த்தநாரீஸ்வர் சந்நதி வெளி சுவற்றிலும் செங்கோட்டுவேலவர் சந்நதி உட்புற சுவற்றிலும் உள்ள செய்திகள் மூலமாக அறியலாம்.
கிபி 1628-ல் சாமண்னன் என்பவர் சந்தன குருடு என்னும் சந்தனம் தேய்க்கும் கல் ஒன்றை செய்து வைத்தார்.
அர்த்தநாரீஸ்வரரின் திருமுன் உள்ள மண்டபம் கி.பி.1519-லும் அர்த்தநாரீஸ்வரர் மகாமண்டபத்திருப்பணி கி.பி1618-லும் மோரூர் அத்தப்ப நல்லதம்பிக் காங்கேயன் என்பவரால் செய்யப்பட்டது.
கி.பி. 1618-ல் செங்கோட்டுவேலவர் (முருகன்) திருமுன் உள்ள பெருநிலை கூடத்தை மோரூர் அத்தப்ப இம்முடி நல்லதம்பிக் காங்கேயன் கட்டுவித்தார். இளைப்பாற்றி மண்டபமும் இவரால் கட்டப்பட்டதே ஆகும்.
திருமலையின் மேலுள்ள நாரி கணபதி மண்டபமும், கி.பி. 1623-ல் மோரூர் குமாரசாமிக் காங்கேயனால் கட்டப்பட்டதாகும்.
மலைக்கோவிலில் உள்ள விசுவேசுவரர்-விசாலாட்சி, நந்தீசர், குஞ்சரமுகேசர் சந்நிதிகள் மதுரையை ஆண்ட விசுவநாத சொக்கலிங்க நாயக்கர் ஆட்சியில் சேசாத்திரி என்பவரால் கட்டப்பட்டவையாகும்.
கி.பி. 1619-ல் இளைப்பாற்றி மண்டபம் நல்லதம்பி காங்கேயன் அவர்களால் கட்டப்பட்டது மற்றும் சிங்கக்கால் குதிரைக்கால் போன்ற இருபத்திஇரண்டு சிற்பங்களும் இவரது காலத்திலேயே கட்டப்பட்டது.