தீர்த்தங்கள்
 

  மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்புகளும் அமையப்பட்ட இத்திருதலத்தில் அமைந்திருக்கும் தீர்த்தங்களில் நீராடி தீவினை நீங்கி நலம் பெற்ற நிகழ்ச்சிகள் பலவுண்டு இத்தீர்த்தங்களில் நீராடுபவர்களுக்கு 49,000 தீர்த்தங்களில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்று திருச்செங்கோட்டு மாண்மியம் என்னும் நூலில் தீர்த்த காண்டம் எனும் பகுதியில் இதை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளன.

  தென்னகத்திற்கு புண்ணியதலமாக சிறந்து விளங்கும் திருச்செங்கோடு மலையை சுற்றி 108 தீர்த்தங்கள் அமைந்திருந்தன. ஆனால் இந்நாளில் இவற்றில் ஒரு சில மட்டுமே நம்மால் காண முடிகிறது. இத்தீர்த்தங்களில் மூழ்கினோர் முக்தி அடைவர் என்றும் நோய்கள் நீங்கும் என்றும் இன்னும் சில தீர்த்தங்களில் நீராடினால் (குமாரதீர்த்தம்) பிள்ளைபேறு பெறுவர் என்றும் மக்களால் நம்பப்படுகிறது.

  இவற்றுள் சில தீர்த்தங்கள் சிவபெருமானாலும் விநாயபெருமானாலும் முருகபெருமானாலும், தேவர்கள் மற்றும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதாக நம் நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்ற்றுள் சில முக்கிய தீர்த்தங்கள்:
  கணபதி தீர்த்தம் தேவ தீர்த்தம் அம்மையப்ப தீர்த்தம் குமார தீர்த்தம்
  சிவ தீர்த்தம் சக்தி தீர்த்தம் பாவநாச தீர்த்தம் பைவர தீர்த்தம்
  நாக தீர்த்தம் சூரிய புஷ்கரணி அல்லி சுனை சித்தர் முலிகை தீர்த்தம்

  மேற்கண்டவற்றில் தேவ தீர்த்தம், (அம்மையப்பர் தீர்த்தம்) மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. இது மாதொருபாகனின் (அர்த்தநாரீஸ்வரர்) கருநிலை கூடத்தில் அவர்தம் திருவடி கீழ் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தை மற்றவர்கள் அணுக இயலாது இத்தீர்த்தத்தை அர்த்தநாரீஸ்வரர் அர்ச்சகர்கள் மட்டுமே எடுத்து பக்தர்களுக்கு வழங்குவது இன்றும் உள்ளது. மற்றொரு சிறப்பு இத்தீர்த்ததம் வற்றாத தீர்த்தமாக இன்றளவும் உள்ளது.