வைகாசி விசாகம் பற்றிய புகைப்படங்கள்
வைகாசி விசாகம்
 
பிரதி வருடம் வைகாசி மாதம் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவானது திருச்செங்கோடு மாநாகரம் முழுவதும் 14 நாட்களுக்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்திருவிழாவின் போது இறைவனின் தரிசனத்தை காண ஏழுகரைநாட்டு மக்களும் திருச்செங்கோட்டில் கூடியிருப்பார்கள்.

பிருங்கி முனிவரின் சாபத்தால் புலி வடிவம் பெற்றிருந்த சயங்கலம் என்ற நகரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன் சிங்கவர்மன் தன் சாபவிமோசனத்திற்காக திருச்செங்கோடு வந்து நாகமலையை மூன்று முறை கிரிவலம் வந்து இறைவனை வணங்கி சுய உருவை பெற்றார். அந்நாளில் அப்புலி தங்கிய குகையை மக்கள் அன்று கூட்டுப்புலி குகை என்று கூறினர். இந்நாளில் அந்த இடத்தை கூட்டப்புலி என்றும் கூட்டப்பள்ளி என்றும் மக்கள் கூறுகின்றனர். இதனை போற்றும் வகையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் மன்னன் தன் நாடு சென்று ஏராளமான செல்வங்களுடன் திருக்கொடி மாடசெங்குன்றூர் வந்து இறைவனுக்கு பல திருப்பணிகளை செயது பின் சிறப்புமிகு தேர்திருவிழாவினையும் கொண்டாடினார் என்று அறியப்படுகிறது.

இத்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெறும் அதாவது ஆலயத்திலுள்ள மூலவமூர்த்தியின் வாகனம் எதுவோ அதன் உருவத்தினை துணிக்கொடியில் வரைந்து பூஜைகள் செயது பின்னர் கொடிமரத்தின் உச்சியில் ஏற்றுவர். இத்தகு நிகழ்ச்சியில் நமது மலைக்கோயில் மிகவும் சிறப்புவாய்ந்தது ஏனெனில் எல்லா கோயில்களிலும் கொடிமரம் ஒன்று மட்டுமே அமைந்திருக்கும்.ஆனால் இங்கு மூன்று கொடி மரங்கள் அமைந்து ஆலயத்தை சிறப்பு செயகின்றன.

இத்திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் சுவாமிகள் மலைமேல் இருந்து கீழே கொண்டுவரப்படும் பிறகு திருத்தேர் மீது அமர்ந்து திருக்கொடிமாடசெங்குன்றூரின் நான்குமாட வீதி வழியாக தேர்இழுக்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இவ்விழாவின் இறுதியில் அதாவது 14-ம் நாள் அதிகாலை இருள்பிரியும் நேரத்தில் தன் பரிவாரங்களுடன் மிகச்சிறப்பான வாண வேடிக்கையுடன் திருமலைக்கு செல்லுவார். இவ்வாறு திருச்செஙகோட்டு மக்களால் வைகாசி விசாகத்திருவிழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.
வைகாசி திருவிழாவின் 14 நாட்கள் நிகழ்ச்சிகள்
நாட்கள் நிகழ்ச்சிகள்
1 ஆம் திருவிழா காலையில் சுவாமிக்கு கொடியேற்றம் நடைபெறும் அதன் பிறகு மண்டபக்கட்டளைகள் நடைபெறும்
2, 3-ஆம் திருவிழா மலைமேல் உள்ள மண்டபத்தில் மும்மூர்த்திகளுக்கும் மண்டபக்கட்டளை நடைபெறும்
4 ஆம் திருவிழா காலை ஆதிகேசவ பெருமானுக்கு கொடியேற்றம் நடைபெறும். பிறகு அன்று இரவு சுவாமிகள் மலைமேலிருந்து புறப்பட்டது. மலை கீழ் வந்து வண்ண வாணவேடிக்கையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நான்கு வீதிகளின் வழியாக வலம் வரும் இத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது
5, 6, 7, 8 ஆம் திருவிழா இத்திருவிழாவின் போது சுவாமிகளுக்கு திருச்செங்கோட்டை சுற்றி உள்ள ஊர்மக்களின் சார்பாக சிறப்பான பூஜைகள் மற்றும் கட்டளைகள் நடைபெறும்
9 ஆம் திருவிழா காலை 9-00 மணிக்கு மேல் அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், செங்கோட்டு வேலவர் திருதேரில் எழுந்தருளல். அன்று விநாயகர், செங்கோட்டு வேலவர் திருதேர் வடம்பிடித்தல் நடைபெறும்
10 ஆம் திருவிழா ஆதிகேசவ பெருமான் திருதேரில் எழுந்தருளல்.அர்த்தநாரீஸ்வரர் திருதேர் வடம் பிடித்தல்
11 ஆம் திருவிழா அர்த்தநாரீஸ்வரர் திருதேர் இழுத்தல் மிகச் சிறப்பாக நடைபெறும்
12 ஆம் திருவிழா அர்த்தநாரீஸ்வரர் திருதேர் நிலைநிறுத்தம் மாலை ஆதிகேசவ பெருமான் திருதேர் இழுத்தல், நிலை சேர்த்தல் மிகச் சிறப்பாக நடைபெறும்
13 ஆம் திருவிழா சுவாமிக்கு மண்டபக்கட்டளையும் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறும்
14 ஆம் திருவிழா திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியாக நடைபெறும் திருவிழாவாவின் போது சுவாமிகள் 14-ம் நாள் அதிகாலை இருள்பிரியும் நேரத்தில் தன் பரிவாரங்களுடன் மிகச்சிறப்பான வாண வேடிக்கையுடன் திருமலைக்கு மீண்டும் செல்லுவார்