பிருங்கி மகரிஷி
 
ஒவ்வொரு புனித தலத்திலும் ஒரு மகரிஷியின் அருள்சக்தி நிரம்பியிருக்கும். உதாரணமாக திருப்பதியில் கொங்கண மகரிஷியும். பழனியில் போக மகரிஷியும், தஞ்சாவூரில் கருவூர் மகரிஷியும், கரூரில் சதாசிவபிரம்மேந்திரான் மகரிஷியும், திருவண்ணாமலையில் ரமண மகரிஷியும், மருதமலையில் பாம்பாட்டி சித்தரின் அருள்சக்தியும் நிரம்பியிருப்பதையும். அந்தந்த திருத்தலங்களில் அந்தந்த மகரிஷிகளின் ஜீவசமாதியும் உள்ளதை இன்றளவும் கண்டு கொண்டிருக்கிறாம். அந்த வகையில் திருச்செங்கோடு திருத்தலத்தில் உள்ள மகரிஷி தான் பிரிங்கிமகரிஷி . இவரே கடும் தவமியற்றி பாஷாணங்கள் என்று கூறப்படுகிற விஷங்களை ஒன்று படுத்தி வெண்பாஷன சிலையாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரனின் சிலையை உருவாக்கியவர் என்று மக்களால் நம்பப்படுகிறது.
பிருங்கிரிஷி மூன்று கால்களை பெற்ற வரலாறு
 
உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த பிருங்கிரிஷி சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர்உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து அம்மையப்பரின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் வலம் வந்தார். இதைகண்ட சினம் உற்ற அம்மை பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். உடனே சிவ பெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளினார் . அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார். பிரிங்கியும் அப்பனே. என்னை அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்றும் பராசக்தியிடம் மன்னிப்பும் கோரினார். அறியாமற்செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார். பிருங்கி அம்மையப்பரின் தரிசனம் கண்டவர் என்பதாலும், தான் கண்ட தரிசனகாட்சியை சிலையாக்கி வழிவழியாய் மக்கள் தரிசனம் பெற உதவியவர் என்பதாலும் அம்மையப்பர் உருவம் ஓவியமாகவோ. உருவமாகவோ. சிலையாகவோ எப்படி தோன்றினாலும் அவர் காலடியில் பிருங்கிரிஷியின் உருவம் பொரிப்பது காலம் காலமாக வழக்கமாக இருந்து வருகிறது.