தலப் பெருமை
 


  
புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்து, புகழும் வளமும் பெற்ற இந்நகரமானது கொங்கேழ் தலங்களில் முதன்மை பெற்றது. குறிஞ்சி வளம் நிறைந்தது, மிகப் பழமை வாய்ந்தது. அரியும், அரணும் ஒன்றே என்ற உண்மையை சமயத்திற்கு உணர்த்திய இத்திருத்தலமானது சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளாலும், திருஞானசம்பந்தப் பெருமானின் தேவார திருப்பதிகத்திலும், அருணகிரிநாதரின் திருப்புகழாலும், கந்தரலங்காரம், சுந்தரந்தாதி, கவிராசப் பண்டிதர், பள்ளு, குறவஞ்சி, உலா, பிள்ளைத்தமிழ், கும்பி போன்ற சிறப்புமிக்க நூல்களாலும் புகழப்பட்டது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல் மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது இத்தலம். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இத்திருதலமானது மரம், செடி, கொடிகளை உடையதாகவும், பல மாட மாளிகைகள் நிறைந்ததாகவும், இங்குள்ள குன்றானது (மலை) இயல்பாகவே செம்மை நிறமாகவும் இருந்ததால் இத்தலத்தை கொடிமாடச் செங்குன்றூர் எனவும் மற்றும் ரிசிகள், தேவர்கள், முனிவர்கள் இருப்பிடமாக இருந்ததால் `திரு` என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்றும் புகழப்பட்டது.