திருக்கோவில் அமைவிடம்
 

குருக்கோடு நவநிதியும் நவரசமும் கொழிக்கும் கோடு
தருக்கோடு சுரபியுந் சிந்தாமணியும் தழைத்த தெய்வத் தானமாமால்
இருக்கோடு பலகலைகள் ஆகமங்கள் குரவோர்கள் நிறைந்த கோடு
செருக்கோடு உமையரனைப் பிரியாலினி திருக்கும் திருச்செங்கோடே

என்று திருப்பணி மாலை என்னும் நூலில் போற்றப்படும் இத்திருத்தலம், நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாகவும், நாமக்கல் மாவட்டத்திற்கு மேற்கே 40 கி.மீ. தொலைவிலும், கரூர் மாவட்டத்திற்கு வடக்கே 35 கி.மீ. தொலைவிலும்,சேலம் மாவட்டத்திற்கு தெற்கே 45 கி.மீ. தொலைவிலும், ஈரோடு மாவட்டத்திற்கு கிழக்கே 20 கி.மீ. தொலைவிலும் வட்டத்தின் தலையிடமாகவும் அமைந்துள்ளது.

சிவனும், பார்வதியும் இரண்டற கலந்ததொரு திருவுருவில் அம்மையப்பனாய் இறைவன் இந்நகரில் உள்ள திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிறப்பு உலகிலேயே வேறு எந்த திருத்தலத்திற்கும் இல்லாத ஒன்றாகும். இங்கு தான் இறைவன் ஆண்பாதி பெண்பாதி என்கின்ற தோற்றத்துடன் உமையொருபாகனாக, மாதிருக்கும் பாதியனாக, மங்கை பங்கனாக அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருள் தருகிறார்.

திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்று சங்க இலக்கியங்களில் அழைக்கப்பட்ட இந்த திருச்செங்கோடு நகரானது பழம் பெருமையும், புராதான சிறப்புகளையும் கொண்ட வரலாற்று புகழ் பெற்ற நகரமாகும். உலகிலேயே எங்கும் இல்லாத வகையில் இறைவன் ஆண் பாதி பெண் பாதியாய் இரண்டாக கலந்ததொரு திருவுருவில் அம்மையப்பனாய், அர்த்தநாரீஸ்வரராய் பக்தர்களுக்கு அருள்பாளிப்பது இந்நகரின் மிகச்சிறப்பான ஒன்றாகும்.